நாட்டின் எந்தப் பகுதியில் மதக் கலவரங்கள் நடந்தாலும் அதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடிபாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஒரிசாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட கிரகாம் என்பவரின் மனைவி கிளாடிஸ் எழுதிய கடிதத்திற்கு அளித்துள்ள பதிலில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரிசாவில் அண்மையில் நடந்த மதக் கலவரங்கள் தொடர்பாக கவலை தெரிவித்திருந்த கிளாடிஸ், இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு பிரதமர் அளித்துள்ள பதில் வருமாறு:
ஒரிசாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். இது குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் நான் பேசியுள்ளேன்.
நமது நாட்டில் வசிக்கும் எல்லா பிரிவு மக்களின் சுதந்திரம், அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு நிச்சயமாக எடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
அதேபோல, அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மக்களின் மத சுதந்திரமும் நிச்சயமாகப் பாதுகாக்கப்படும். அதை அவமதித்து கலவரத்தை தூண்ட நினைக்கும் சக்திகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.