நக்சலிசத்தை ஒடுக்குவதில் ஆந்திரப் பிரதேச அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், நக்சலிசத்தை அடக்குவதற்கு ஆந்திர மாநிலம் எடுத்துவரும் நடவடிக்கைகள் சரியான தேர்வாகும் என்றதுடன், நக்சலிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பீகார், சத்தீஷ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களும் ஆந்திரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
தங்கள் சுயநலனுக்காக நக்சலைட்டுகள் நடத்தும் தாக்குதல்களால், கிராமப்புற மக்களுக்குக் கல்வி வழங்குதல், மருத்துவ வசதிகளை வழங்குதல் போன்ற அரசின் பல நல்ல திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிவதில்லை என்று அவர் குற்றம்சாற்றினார்.
மேலும், நக்சலைட்டுகள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதை தவறானது என்று உணர்ந்து சமூகத்துடன் இணையும் நாள் வரும் என்றும் ஜெய்ஸ்வால் நம்பிக்கை தெரிவித்தார்.