பாகிஸ்தான் விரும்பினால் அந்நாட்டில் ஜனநாயகத்துடன் இயல்பு நிலை திரும்புவதற்கு இந்தியா உதவத் தயாராக உள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள தேசியத் தொழிற் பாதுகாப்புப் படைக் கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அண்டை நாடுகளில் அதிகரித்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகளும் அதனால் ஏற்படும் நிலையற்ற தன்மையும் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.
"தங்கள் நாட்டில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. மக்களுடைய பங்களிப்புடன் தான் பாகிஸ்தானில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்.
வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் மிளிரும் ஜனநாயகத்தில் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானும் வேற்றுமைகளைக் கொண்டுள்ள நாடு என்றாலும், இந்தியாவுடன் ஒப்பிடும்போது குறைவான வேற்றுமைகளைத் தான் கொண்டுள்ளது. எனவே அங்கு குறுகிய காலத்தில் அமைதியை நிலைநாட்டிவிட முடியும்." என்றார் அவர்.
இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிக் குறிப்பிட்ட ஜெய்ஸ்வால், கடந்த காலங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிக்க முயற்சித்து வருகிறோம் என்றும் அதில் நாம் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.