புத்தாண்டு அன்று தரிசனத்திற்கு வருகை தரும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக லட்டுகளை வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்துத் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் சென்னை ஆலோசனைக் குழுத் தலைவர் ஆனந்த குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் லட்டு இலவசமாக வழங்கப்படும்
கோயில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கவுண்ட்டரில் லட்டு விற்பனையும் வழக்கம்போல நடக்கும்.
அதிகாலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனத்திற்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
காவல்துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் பக்தர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.