வருகிற புத்தாண்டு நமது நாட்டிற்கு வளர்ச்சியைக் கொண்டு வரட்டும் என்று குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் வாழ்த்தியுள்ளார்.
இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "2008 ஆம் ஆண்டின் முதல் நாளில் உதிக்கின்ற சூரியன் அனைவருக்கும் வளமான மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.
இந்தப் புத்தாண்டில், நாம் ஒவ்வொருவரும் நமது நாட்டின் மேம்பாட்டிற்காக பாடுபடுவோம் என்று உறுதி எடுப்போம். தேவைப்படுவோர்க்கும், பின்தங்கியோருக்கும் உதவுவதன் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கு சிறிதளவாவது பங்காற்றுவோம்." என்று கூறியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வருகிற புத்தாண்டு புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கட்டும் என்று கூறியுள்ளார்.
"நமது மக்களில் கோடிக்கணக்கானவர்கள் அறியாமை, வறுமை, உடல்நலக் குறைபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இச்சிக்கலுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துத் தீர்க்க வேண்டும். அதற்கு நம் எல்லோருடைய பங்களிப்பும் அவசியம்.
அர்ப்பணிப்புடன் கூடிய ஒன்றுபட்ட உழைப்பினால் மட்டுமே, நம் நாடு இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு வளர்ந்த நாடாக மாறும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறைவேறும்" என்றும் அவர் கூறியுள்ளார்.