இமாச்சல பிரதேச மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரேம் குமார் துமால் பதவியேற்றார்.
சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இன்று நடந்த விழாவில் துமாலுக்கு மாநில ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 1971 ஆம் ஆண்டு உருவான இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் 16 ஆவது முதல்வராக துமால் பதவியேற்றுள்ளார். இவர் ஏற்கெனவே 3 முறை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த விழாவில் துமால் மட்டும் பதவியேற்றுக் கொண்டார். மற்ற அமைச்சர்கள் விவரத்தை பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பேசி தீர்மானிக்க உள்ளனர்.
முன்னதாக, யார் யாருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிச்சயம் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்படும் என்று துமால் குறிப்பிட்டார்.
பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி, மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பி.சி.கந்தூரி (உத்ராஞ்சல்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), ரமன் சிங் (சத்தீஷ்கர்) மற்றும் பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) ஆகியோர் பங்கேற்றனர்.
மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலச் சட்டப் பேரவைக்கு 2 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க. 41 இடங்களைக் கைப்பற்றி பெருவாரியான வெற்றி பெற்றது.
இதில், பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரும் ஆங்கிலப் பேராசிரியருமான துமால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தனது பள்ளித் தோழன் பி.சி.லக்வாலை 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இத்தேர்தலில் காங்கிரஸ் 23 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.