கடந்த நவம்பர் 23 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் நீதிமன்றங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹர்கத் உல் இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்த அஃதாப் ஆலம் அன்சாரி என்ற தீவிரவாதி மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறப்பு அதிரடிப்படையினரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து நடத்திய வேட்டையில் இவன் கைது செய்யப்பட்டான் என்று மேற்குவங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.ஐ.ஜி. ராஜிப் குமார் தெரிவித்தார்.
அஃதாப் ஆலம் அன்சாரி, உ.பி. குண்டுவெடிப்பு நிகழ்வுகள் தவிர மேலும் சில முக்கிய குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன் என்று கருதப்படுகிறது.
ஹர்கத் உல் இஸ்லாமி அமைப்பு கடந்த 1980 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானைச் சேர்ந்த சில தீவிரவாத அமைப்புகளில் இருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள இந்த அமைப்பு தற்போது, ஜம்மு காஷ்மீர் மற்றும் வங்கதேசத்தின் சில பகுதிகளில் பரவியுள்ளது.