இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு எதிரான மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக, சட்டப் பேரவைத் தேர்தலில் தற்பொழுது கிடைத்துள்ள முன்னனி நிலவரங்களின்படி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் நண்பகல் நிலவரப்படி, இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பா.ஜ.க. 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 19 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆளும் காங்கிரஸ் 18 தொகுதிகளைக் கைப்பற்றியதுடன் 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்துவருகிறது.
பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் வாக்கு வங்கியை வெகுவாக பாதிக்கும் என்று கருதப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.
சுயேட்சைகள் ஒரு தொகுதியைக் கைப்பற்றியதுடன் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
ரோக்ரு தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வர் வீரபத்ர சிங், பாம்சனில் போட்டியிட்ட பா.ஜ.க. வின் முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளனர்.
பிலாஸ்பூரில் போட்டியிட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெ.பி.நடாவும் வெற்றியைக் கைப்பற்றினார்.
வீரபத்ர சிங்கின் 7 கேபினட் அமைச்சர்களில் 6 பேர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். குமார்செய்னில் போட்டியிடும் மின்துறை அமைச்சர் வித்யா ஸ்டோக்ஸ் மட்டுமே முன்னிலையில் உள்ளார்.
இதற்கிடையில் இமாச்சல நிலவரம் குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.