இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 46 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னனியில் உள்ளதால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 16க்கும் குறைவான இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது!
காங்கிரஸ் ஆளும் மாநிலமான இமாச்சலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 14 ஆம் தேதியும், மீதமுள்ள 65 தொகுதிகளுக்கு கடந்த 19 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.
இத்தேர்தலில் மொத்தம் 336 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையில் நிலவிய கடுமையான போட்டி இருந்தது. சராசரியாக 71 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று காலை 8 மணிக்கு 41 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சிறிது நேரத்திலேயே பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. முன்னணி பெற்றது.
மொத்தமுள்ள 68 தொகுதிகளில், காலை 10.45 மணி நிலவரப்படி பா.ஜ.க. 46 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னணி வகித்தன. இதனால் அங்கு பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது.
பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக பிரேம் குமார் துமால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் போட்டியிட்ட பாம்சன் தொகுதியில் முன்னணியில் உள்ளார். ரோக்கு தொகுதியில் போட்டியிட்ட இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திர சிங்கும் முன்னணியில் உள்ளார்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 43 இடங்களிலும், பா.ஜ.க. 16 இடங்களிலும் வெற்றிபெற்று இருந்தன.