ஒரிசாவில் இன்றும் 11 தேவாலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒரிசாவில் நடந்து வரும் கலவரங்கள் தொடர்பாக அம்மாநில அரசு விளக்கம் அனுப்பியுள்ளது என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் திலீப் பட்காவ்கர் தெரிவித்தார். அந்த விளக்கத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இன்று 11 தேவாலயங்களுக்குத் தீ
கலவரத்தின் மையமான கந்தமால் மாவட்டத்தில் உள்ள 11 கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுக் கூடங்களுக்கு இன்று அதிகாலை மர்மக் கும்பல் ஒன்று தீ வைத்துவிட்டுத் தப்பி ஓடியது. இதனால் பதற்றம் அதிரித்துள்ளது.
புல்பானி சதார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடிகரா, மினியா, மசபதார், பிசுபதார், பந்தரபடா, படஹபங்கா, கண்டபதார் ஆகிய கிராமங்களில் மட்டும் 8 பிரார்த்தனைக் கூடங்களுக்குத் தீ வைக்கப்பட்டதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பலிகுடா, தரிங்கிபாடி, பிராமணிகான், புல்பானி நகரங்களில் 3 தேவாலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, பங்கிஞ்சியா, டியான்ஜியா, கொட்டகுடா கிராமங்களில் உள்ள 3 வழிபாட்டுக் கூடங்களுக்கு தீ வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த 3 படைப் பிரிவு மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில காவலர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு தளர்வு
கந்தமால் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு நேற்றிரவு முதல் இன்று காலை 9.00 மணி வரை தளர்த்தப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும், வெளியிடங்களுக்கு வேலைக்குப் போவதற்கும் உதவும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பஹாபர்கிரகி மொஹபட்ரா கூறினார்.
கந்தமால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சமூகவிரோதிகளின் அச்சுறுத்தலால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து கந்தமால் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
முன்னதாக கலவரம் பாதித்த பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.