நமது நாட்டின் முதல் பெண் காவல் அதிகாரியான கிரண் பேடியின் விருப்ப ஓய்வு கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
கிரண் பேடியின் விருப்ப ஓய்வு மனுவை ஏற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 24 ஆம் தேதி குடியரசு தலைவர் அனுப்பிய அறிவுறுத்தல் கடிதத்தின்படி இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் பதவி வகித்துவரும் கிரண் பேடி, தனது 35 ஆண்டுகாலப் பணியில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
கிரண் பேடி தான் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே நேர்மையான திறமையான அதிகாரி என்பதை நிரூபித்து வந்துள்ளார். திஹார் சிறை அதிகாரியாக இருந்தபோது அவர் மேற்கொண்ட புதுமையான அணுகுமுறைகள் இன்றும் பேசப்படுகின்றன.
சமூக சேவையில் மிகவும் ஆர்வம் கொண்ட கிரண் பேடி தனது அளப்பரிய பணிகளுக்காக மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
தனது விருப்ப ஓய்வு மனுவில் கூட, சமூக சேவைப் பணிகளில் சாதிக்க விரும்புவதால் இம்முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. அமைதிக்குழுவில் காவல்துறை ஆலோசகராகப் பணியாற்றிய நேரத்தில் கிரண் பேடியின் திறமை உலகம் முழுமைக்கும் தெரியவந்தது. அதற்காக அவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.