மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக பொதுமக்களின் நிலங்கள் கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உறுதியளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த வன்முறைகளுக்குப் பிறகு முதல் முறையாக முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று நந்திகிராமுக்குச் சென்றார்.
அங்கு, வன்முறையால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள், பூமி பாதுகாப்பு இயக்கத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்தித்து தனது வருத்தத்தைத் தெரிவித்ததுடன், கிழக்கு மிட்னாபூரில் பொது மேடையிலும் பேசினார்.
அப்போது, நந்திகிராமில் நடந்துள்ள வன்முறைகளால் மாநிலத்தின் தொழில்மயமாக்கல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும், முதலீட்டாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்சாலைகள் அமைப்பதற்கு நிலங்கள் கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று குறிப்பிட்ட புத்ததேவ், கடந்த காலங்களில் நடந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
"சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்து மக்களுக்கு புரியவைக்க மார்க்சிஸ்ட் கட்சியும், மாநில நிர்வாகமும் தவறிவிட்டன. இதை பயன்படுத்தி எதிர்கட்சியினர் மக்களை தவறாக வழி நடத்திவிட்டனர்.
எந்த ஒரு அரசும் தனது மாநில மக்களை கொல்வதற்காக காவலர்களை அனுப்புவதில்லை.
நந்திகிராம் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும். நந்திகிராமில் அமைதியை ஏற்படுத்துவதற்காக எதிர்கட்சிகள் அமைதிக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்" என்றார் அவர்.
நந்திகிராமில் நடந்துள்ள மோதல்களில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.