சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடப்பதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் சுமார் 20 மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னரே சுவாமியை தரிசிக்க முடிகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசித்து வருகிறார்கள்.
இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு, சுவாமி அய்யப்பனுக்கு தங்கஅங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
இதற்காக கடந்த 23-ஆம் தேதி, ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்கஅங்கி இன்று மதியம் பம்பையை அடைந்தது. அங்கு கணபதி கோவில் முன், மாலை 4 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது.
அதன்பின்னர், மேளதாளத்துடன் தலைச் சுமையாக சன்னிதானம் நோக்கி தங்கஅங்கி கொண்டு செல்லப்படுகிறது. சன்னிதானத்தை அடைந்ததும் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி டி.கே.கிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் ஆச்சார முறைப்படி தங்கஅங்கியை பெற்று கோவில் கருவறைக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் நடை அடைக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு அலங்காரம் நடைபெறும்.
மாலை 6.30 மணிக்கு, சுவாமி அய்யப்பன் தங்கஅங்கியுடன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.
நாளை மண்டல பூஜை!
சபரிமலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.05 மணி முதல் 10 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 4.15 மணிக்கு கணபதி ஹோமமும், 7.30 மணிக்கு உஷ பூஜையும் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மதியம் 12.29 மணி முதல் 12.40 மணி வரையிலான மீன ராசியில் மண்டல பூஜை நடைபெறும். பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
இரவு 10.30 மணிக்கு அத்தாழபூஜையும், 10.50 மணிக்கு ஹரிவராசனமும் முடிந்தபிறகு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுவாமி அய்யப்பனை தரிசிக்க சன்னிதானத்தில் இருந்து பம்பை வரை பக்தர்கள் வரிசை நிற்கிறது. இதனால் சுமார் 20 மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னரே சுவாமியை தரிசிக்க முடிகிறது.