வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் கொல்கட்டாவுக்கு வரலாம், ஆனால் அவருக்கான பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு கூறியுள்ளார்.
தற்போது புதுடெல்லியில் மத்திய அரசின் பாதுகாப்பில் தங்கியிருக்கும் தஸ்லிமாவிடம், அவர் மீண்டும் கொல்கட்டா திரும்புவதை அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் அண்மையில் தெரிவித்த நிலையில் ஜோதிபாசுவின் கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையில், மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், தஸ்லிமா வீட்டுக் காவலில் அடைக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஊடகங்களிடம் பேச எல்லா உரிமைகளும் உள்ளது என்றும் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.