குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதாக் கட்சி அருதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி 117 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளும் சுயேட்சைகளும் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
ஐந்தாண்டு கால மோடியின் ஆட்சிக்கும், அவரது அணுகுமுறைக்கும் ஒரு சவாலாகக் கருதப்பட்ட இத்தேர்தலில் அவர் மீண்டும் பெரும் வெற்றி பெற்று 3வது முறையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.
குஜராத்தின் செளராஷ்டிரா பகுதியில் பாஜகவிற்கு பெருத்த பின்னடைவு ஏற்படும் என்று வெளிவந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாகி அங்கும் மோடியின் செல்வாக்கினால் பாஜகவிற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
2002ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 127 இடங்களில் வெற்றி பெற்றது. தற்பொழுது 10 இடங்களில் குறைந்தாலும், அக்கட்சி அருதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
மோடி டிசம்பர் 27ல் பதவியேற்பார்
குஜராத் மாநில முதலைமச்சராக நரேந்திர மோடி டிசம்பர் 27ஆம் தேதி பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
மாநில ஆளுநர் நாவல் கிஷோர் ஷர்மாவின் இல்லத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.