குஜராத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு நடக்கிறது. வாக்குப் பதிவில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் முடிவுகள் நாளை பிற்பகலில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. கடந்த 11 ஆம் தேதி 87 தொகுதிகளுக்கும், 16 ஆம் தேதி 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில் சராசரியாக 62.5 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை நாளை 37 இடங்களில் ஒரே நேரத்தில் எண்ணப்படுகின்றன.
இரண்டுகட்ட தேர்தலிலும் ஆளும் கட்சியான பா.ஜ.க. வுக்கும், காங்கிரசுக்கும் இடையில் நேரடியான போட்டி நிலவியதைக் காண முடிந்தது. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு கடுமையான வார்த்தைகளில் கருத்துகளை வீசினர்.
வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் வெவ்வேறு முடிவுகளைத் தந்திருந்தாலும், பொதுவாக பா.ஜ.க. வுக்கு இம்முறை சரிவு இருக்கும் என்றே கூறுகின்றன.
வாக்குப் பதிவு நடந்த இடங்களில் ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, பா.ஜ.க. 25 இடங்களை இழந்து 103 இடங்களைக் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 25 இடங்கள் அதிகம் பெற்று 76 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே குஜராத் மாநில தேர்தல் முடிவுகள், மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான மக்களின் மதிப்பீடாக அமையும் என்றும் கருதப்படுகிறது.