உத்தரபிரதேசத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட ஹர்கத்-உல்-ஜெஹதி-இஸ்லாமி (ஹூஜி) இயக்கத்தை சேர்ந்த கலித் முகமது, தாரிக் என தெரியவந்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கலித், காஷ்மீரில் பயிற்சி பெற்றுள்ளதும், மற்றொருவரான தாரிக் அம்மாநிலத்தின் அசம்கார்ஹ் மாவட்டத்தில் வசித்து வந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பரபங்கி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இவர்கள் 2 பேரிடமும் 1.25 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் மற்றும் ஜெலடின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 23ம் தேதி உத்தரபிரதேசத்தின் லக்னோ, வாரணாசி, பைசாபாத் நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 5 வழக்கறிஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.