கட்சியின் விதிமுறைகளை மீறி நடந்ததாகப் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் கேசுபாய் பட்டேல், காசிராம் ராணா மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இருவரும் கட்சிக்கு எதிரான தங்களது செயல்பாடு குறித்து தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கேசுபாய் பட்டேலும் காசிராம், ராணாவும் கட்சிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ளது என்று காசிராம் ராணா கூறியிருந்தார். இந்தத் தகவல் கிடைத்தவுடன் அவர் மீது கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் நடவடிக்கை எடுத்தார்.
ராஜ்காட் தொகுதியின் பா.ஜ.க. நாடாளுமன்ற வல்லபபாய் கதிரியாவும் கட்சி விதிமுறையை மீறும் வகையில் பேசினார். அதுபோல, தேர்தலுக்கு ஒருவாரத்துக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேந்திரநகர் சோமபாய் படேல், கட்சியின் தலைமையை கடுமையாக விமர்சித்து பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார். நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்றும், அவரை ஆட்சிப் பீடத்தில் இருந்து தூக்கி எறிவதற்கான சரியான தருணம் இதுதான் என்றும் குஜராத் வாக்காளர்களுக்கு அந்த விளம்பரத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் தற்காலிக நீக்கம் செய்த கட்சித் தலைமை, அவர்களின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ரத்து செய்தது. இருவரும் தங்களது செயல்பாடு குறித்து இன்னும் 10 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லை என்றால் அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கையை கட்சித் தலைமை மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.