பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஜனவரி முதல் வாரத்தில் அதிகரிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் எம்.எஸ்.சீனிவாசன் தெரிவித்தார்.
இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசும் போது சீனிவாசன், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
அடுத்த மாதம் நடக்கும் அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் விலை உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் 2004 ஆம் ஆண்டில் நாட்டின் 20 நகரங்களில் அதிகளவு மாசு ஏற்பட்டுள்ளது என்று கூறியதை நினைவுபடுத்திய சீனிவாசன், இந்த நகரங்களில் இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்களை அமைப்பதற்கு அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் சென்ற வருடம் அரசுக்கு ரூ.49 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது. இது இந்த வருடம் ரூ.75 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க இதை விநியோகஸ்தர்கள் தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தம் முறையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்று கூறினார்.
அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஈரானில் இருந்து இயற்கை எரிவாயுவை கொண்டு வரும் திட்டத்தில், ஈரானுக்கு கொடுக்க வேண்டிய இயற்கை எரிவாயுவின் விலை இறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் வழியாக கொ்ண்டுவர வேண்டியதிருப்பதால், பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டு வரும் குழாய் அமைக்கும் பணி வருகின்ற மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.