பாகிஸ்தானில் தேர்தலுக்குப் பிறகு வலுவான அரசு அமைந்தால் இந்தியா- பாகிஸ்தான் அமைதிப் பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று ஹூரியத் மாநாட்டுக் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மசூதியில் பக்ரீத் தொழுகையில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் மிர்வாஸ் அமர் ஃபரூக், அமைதிப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டால் காஷ்மீர் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்றார்.
அமைதிப் பேச்சின் போது காஷ்மீர் மக்களின் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகச் சில நிவாரணங்கள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை திரும்பப் பெறுவதுதான், அம்மாநில மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குவதற்கு ஒரே வழி என்று கூறிய ஃபரூக், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"அமைதிப் பேச்சு நிலுவையில் இருக்கும்போதே, எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் இந்திய ராணுவத்தினரும் மோதிக்கொண்டு இறக்கின்றனர். அவர்களுக்கு நடுவில் சிக்கும் அப்பாவி மக்களும் அடிக்கடி கொல்லப்படுகின்றனர். இந்தப் பலிகளை நிறுத்துவதற்கு ராணுவத்தைத் திரும்பப் பெறுவதுதான் ஒரே வழி" என்றார் ஃபரூக்.