நமது நாட்டில் கருக்கலைப்பு காரணமாக ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பதாகவும், இவர்களில் பெரும்பாலோர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழப்பதாகவும் இந்திய மகப்பேறு மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஹேமா திவாகர் தெரிவித்தார்.
தேவையற்ற கரு உருவாவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"இந்தியாவில், கருவுறும் பெண்களில் 78 விழுக்காட்டினர் திட்டமிடுவதில்லை. அதிலும் 25 விழுக்காட்டினர் குழந்தை பெறுவதை விரும்புவதில்லை. இதனால் ஆண்டுதோறும் 1 கோடியே 10 லட்சம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். இதில், போதிய அனுபவம் இல்லாதவர்கள் அளிக்கும் கருக்கலைப்பு சிகிச்சையால் 80 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர்.
தேவையற்ற கருவைத் தவிர்ப்பது குறித்து பெண்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணமாகும். தற்போது வெளிவந்துள்ள அவசரகால கருத்தடை மாத்திரைகள் குறித்து ஒரு விழுக்காடு பெண்களே தெரிந்துள்ளனர். பெரும்பாலான பெண்கள் அறிந்திருக்கவில்லை.
அவசரகால கருத்தடை மாத்திரையை 72 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால், தேவையற்ற கருவைத் தவிர்க்க முடியும். இத்தகைய மாத்திரைகளை எப்போதாவது ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதையே தொடர்ந்து பயன்படுத்த கூடாது. ஆனால் இது கருக்கலைப்பு மாத்திரை என்று பெண்கள் நினைப்பதும் தவறு" என்றார் அவர்.
மேலும், இத்தகைய மாத்திரைகள் உள்ளதால், இளைய சமூகத்தினர் தவறான வழிகளில் செல்வது அதிகரிக்கும் என்ற குற்றச்சாட்டு தவறானது என்று கூறிய ஹேமா திவாகர், சமீப காலங்களில் திருமணமாகாத பெண்கள் கர்ப்பமடைவது அதிகரித்துள்ளதையும் ஒப்புக் கொண்டார்.
வசதியான அலுவலக நேரம், அதிகரித்து வரும் கால் சென்டர்கள் காரணமாக பெங்களூருரில் இளம்பெண்கள் திருமணத்துக்கு முன்னர் கர்ப்பமாவது அதிகரித்துள்ளது என்றார் ஹேமா திவாகர்.