நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலாக நக்ஸலைட் உள்ளிட்ட இடதுசாரி பயங்கரவாதமும், பெருளாதார ரீதியான சமச்சீரற்ற வளர்ச்சியும் உள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுளார்.
டெல்லியில் நடைப்பெற்று வரும் உள்நாட்டு பாதுகாப்புத் தொடர்பான அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்று, மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய பிரதமர், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் இடதுசாரி பயங்கரவாதமே என்று கூறியுள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான பாதுகாப்பு முறைகளையும் கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேபாளம் தொடங்கி ஆந்திரப் பிரதேசம் வரையில் நக்சலைட்டுகள் தங்களின் எல்லைப்பகுதியை விரிவுப்படுத்தி உள்ளதாக தெரிவித்த பிரதமர், தங்களது செல்வாக்கிற்க்கு உட்பட்ட பகுதிகளின் விரிவாக்கத்தில் ஒரளவு நக்சலைட்டுகள் வெற்றியும் பெற்றுள்ளதாவும் கூறியுள்ளார்.
சில மாநிலங்களில் பொது மக்களின் அன்றாட பிரச்சனைகளான நிலப் பிரச்சனைகள் உள்ளிட்ட அவர்களின் உரிமைப் பிரச்சனைகளிலும் இணைந்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார். அண்மையில் நாட்டையே உலுக்கிய பிரச்சனையிலும் நக்சலைட்டுகளின் பங்களிப்பு உள்ளதற்கான ஆதாரங்கள் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் கூறியது மறைமுகமாக நந்திகிராம் நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
”நாட்டின் சில பகுதிகளில் உள்ள நக்சலைட்டுகள் காவல் துறையினர், அரசு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு தங்களின் தாக்குதல் திறனை அதிகரித்துள்ளனர். பொருளாதாரத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் சீர்குலைக்கும் செயல்களில் நக்சலைட்கள் மிகுந்த கவனத்துடன் குறி வைத்துள்ளனர். பொருளாதாரத்தின் முக்கியமான இடங்களைக் குறி வைத்துள்ள நக்சலைட்டுகளால் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளைக் சீர்குலைக்கவும், ஏன், வளர்ச்சித் திட்டங்களை காலதாமதம் செய்யவும் இயலும்” என்றும் எச்சரித்துள்ளார்.
நக்சலைட்டுகளால் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து பிரதமர் பேசிக்கொண்டிருக்கும் போதே, பீகார் மாநிலத்தில் உள்ள சம்பாரன் மாவட்டத்தில் மத்திய ஆயுதப் படை காவலர்கள் 3 பேர் மீது அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களால் 100 -க்கும் மேற்பட்ட மாவோயீஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
நக்சலைட்டுகளை எதிர்கொள்வது என்பது, மிகுந்த திறனுடன், மேம்படுத்தப்பட்ட புலனாய்வு தகவல் சேகரிக்கும் முறைகள், காவல் துறையினரின் திறனை உயர்த்துதல், மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கும் - மத்திய அரசுக்கும் இடையேயும் நல்ல ஒத்துழைப்பு தேவையானதாக உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.இப்பிரச்சனையை தீர்க்க திறமையான நல்ல தலைமை மிகவும் முக்கியமான ஒன்று என்று குறிப்பிட்டார்.
நக்சல் குழுவினரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பு, அவர்களுக்கு உதவும் நபர்கள், அமைப்புகள் தொடர்பானவற்றை முதலில் கண்டறிய வேண்டும். தேவையான நவீன ஆயுதங்களுடன், முறைப்படுத்தப்பட்ட வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நக்சலைட்டுகளை எதிர் கொள்ள நம்மிடம் உள்ள பாதுகாப்புப் படையினர் போதாது என்றார்.
நமது பாதுகாப்புப் படையினருக்கு போதுமான ஆயுதங்களும், பயிற்சியும், எட்ட வேண்டிய இலக்கையும் பாதுகாப்புப் படையினருக்கு வழங்காத நிலையில் அவர்களால் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை எதிர் கொள்ள இயலாது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப முன்னுரிமை வழங்க வேண்டும். இடது சாரி தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த, அதற்கென்றே அர்ப்பணிப்பு எண்ணங்கொண்டவர்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு அமைப்பை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உள்துறை அமைச்சகம் செய்து தரும் என்று கூறினார்.
பயங்கரவாதத்தைக் அதன் அனைத்து நிலைகளிலும் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் உறுதியான தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார். பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் புலனாய்வு முக்கியமானது என்றும், தகவல்களைப் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது அதைவிட முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
நாம் நமது எதிர்ப்பு, தடுப்பு முறைகளை வலுப்படுத்தி பயங்கரவாத செயல்களைத் தடுத்து நிறுத்துவதுடன் அவற்றின் விளைவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நம்முடைய பாதுகாப்புக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் ஏற்கெனவே நடைப்பெற்றுள்ள பயங்கரவாதச் செயல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக கொண்டுள்ளார்.
நக்சலைட்டுகள் தங்களின் நடவடிக்கைகளை மாநிலங்கள் தோறும், ஏன் சர்வதேச எல்லைகளைக் கடந்து இருந்தும் செயல்படுத்தும் நிலையில் உள்ளதாகவும், புலனாய்வுத் துறையினர் அவர்களின் நடவடிக்கைகளை இன்னும் ஆழமாக ஊடுருவி கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அளவிலான குற்றங்கள் இவை இவை என்று எதையும் குறிப்பிட்டு, அதனை விசாரிக்க ஒரு தேசிய அளவிலான அமைப்புத் தேவை என்று சொல்லவில்லை. சம்பவங்களின் அடிப்படையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க அதற்கென்று தனியாக ஒரு அமைப்புத் தேவையா என்பது குறித்து உங்களுடைய கருத்துக்களை அறிந்த பின்னர் அது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றார். அல்லது ஏற்கெனவெ உள்ள நீதித்துறை நடைமுறைகளுடன் இணைந்த ஒரு வறையரையை உருவாக்கலாமா என்பது குறித்து உடனடியாக ஆலோசனை செய்து பார்க்க வேண்டுமென்றுக் கேட்டுக் கோண்டார்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்களைச் அபரிவிதமான தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தின் பலன் சென்றடைய வில்லை. இது தீவிரவாத கொள்கைகளுக்கு பலன் தரும் நல்ல விளைநிலங்களாக மேற்கண்ட பகுதிகளை உருவாகியுள்ளன என்று பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிலவும் சமச்சீரற்றத் தன்மை, நாட்டில் பல்வேறு பிளவுகளை நம்மிடையே உருவாக்கியுள்ளது. அதாவது நம்மிடையே மண்டலங்களுக்கு இடையேயான பிளவு, கிராமப்புற - நகர்புற பிளவு, வட்டாரங்களுக்கு இடையேயான பிளவுகள் தான் காரணிகள். இந்த பிளவுகள், வேறுபாடுகள் நம்மை பற்றுறுதியின்மை, மிகப் பெரிய அளவில் இடம்பெயறுதல், பிணக்கு, கருத்து வேறுபாடுகளை உருவாக்குகிறது. சமச்சீரற்ற வளர்ச்சி உள்நாட்டுப் பாதுகாப்புக்கு காரணம் என்பதை பல்வேறு பிரச்சனைகள் மூலம் தெரிநிது கொண்டதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.