விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ரூ.500-க்கு செல்போன் கிடைக்கும் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் தெரிவித்தார்.
டெல்லியில் அசோசெம் அமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்திருந்த ஃபோகஸ் 2007 கருத்தரங்கில் இன்று ஆஸ்கர் பெர்னான்டஸ் பேசும் போது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறி கொண்டுள்ளோம். கூடிய விரைவில் விவசாயிகளுக்கு ரூ.500 என்ற விலையில் செல்போன் கிடைக்கும்.
மத்திய அரசு விவசாயிகள் செல்போ்ன் மூலம் இணையத்தில் தொடர்பு கொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கான விலையை நிர்ணயிக்க முடியும்.
அத்துடன் இணையத் தளங்கள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் விதை விதைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அறுவடையாகும் பயிர் பற்றிய விபரம், எவ்வளவு உரம் தேவை. உரம் இடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதியை அதிகப்படுத்த முடியும்.
தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சகம், செய்தி மற்றும் ஒலி பரப்பு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஒன்றாக இணைந்து எல்லா விவசாயிகளுக்கும் செல்போன் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் எல்லா தரப்பு மக்களும் தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இணைய முடியும்.