அணுசக்தி, நந்திகிராம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆராய கூட்டப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
கோயமுத்தூரில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி அரசியல் தீர்மானத்தை இறுதி செய்வது தொடர்பாக டெல்லியில் அக்கட்சியின் 3 நாட்கள் நடைப்பெறவுள்ள மத்தியக் குழுக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
கடந்த முறை கூடிய அரசியல் தலைமைக் குழுவில் மாநாட்டுக்கான அரசியல் தீர்மானம் வகுக்கப்பட்டது. நந்திகிராம், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை இந்த மாநாட்டின் போது விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நந்திகிராமில் கலவர சூழ்நிலைக்கு காரணம் அரசியல், நிர்வாகம் ஆகியவை செயல்பட முடியாமல் தோல்வியடைந்ததே காரணம் என்று முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் நடைபெறும் மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறை படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவற்றுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக எந்த எந்த கட்சிகளை அணுகுவது என்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.