புதுடெல்லியில் இன்று நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. முதல்வர்கள், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 15 விழுக்காடு நிதியை சிறுபான்மையினரை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ஒதுக்கலாம் என்ற மத்திய அரசின் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது என்று அவர்கள் குற்றம் சாற்றினர்.
கூட்டத்தின் இடையில் செய்தியாளர்களைச் சந்தித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான், சத்தீஷ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோர் மத்திய அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தனர்.
நமது நாட்டில் 150 மாவட்டங்கள் வறுமையாலும், நக்சலைட்டுகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையை முதலில் தீர்க்க வேண்டியது கட்டாயம் என்று அவர்கள் கூறினர்.
மத்திய அரசு, 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கவுள்ள 15 விழுக்காடு நிதியை நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வறுமையை ஒழிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிடுத்து மத அடிப்படையில் நிதி ஒதுக்குவது வாக்குவங்கி அரசியலைத்தான் ஊக்குவிக்கும் என்றும் நரேந்திர மோடி குற்றம்சாற்றினார்.
நமது நாட்டில் சுமார் 20 விழுக்காடு கிராமங்களும், 38 விழுக்காடு மக்களும் மின்சார வசதி இல்லாமல் தவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த அணுகுமுறை குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்றார் மோடி.
ஏழைகள் எல்லோரும் ஏழைகள்தான். அவர்களுக்குள் ஜாதி, மதம் கிடையாது. எனவே பொருளாதார அடிப்படையில்தான் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்.
மத்திய அரசின் இச்செயல் வாக்கு வங்கி அரசியலுக்கு சிறந்த உதாரணம் என்று கூறிய செளகான், இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம் என்றார்.
சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கூறுகையில், குறிப்பிட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளைப் பற்றித்தான் 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் பேசப்பட்டுள்ளது. வறுமை நமக்கு மிகப்பெரிய சவால். அதில் வகுப்பு பாகுபாடு பார்க்கக் கூடாது என்றார்.