பழங்குடியினர் பட்டியலில் தங்கள் இனத்தையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி சோப்ரா குழு நிராகரித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்த குர்ஜார் இனத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பிரிவுக்கு தங்களை மாற்ற வேண்டும் என்று குர்ஜார் இனத்தவர் விடுத்த கோரிக்கை மீது விசாரணை நடத்திய நீதிபதி ஜேஸ்ராஜ் சோப்ரா குழு தனது அறிக்கையை ராஜஸ்தான் மாநில அரசிடம் அளித்தது.
பழங்குடியினர் பட்டியலுக்குத் தகுதியாகக் கூறப்பட்டுள்ள வரைமுறைகள் குர்ஜார் இனத்தவருக்குப் பொருந்தாது என்பதால், அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேயே வைத்திருக்கலாம் என்று சோப்ரா அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புவதென்று, முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக நலத்துறை அமைச்சர் திகாம்பர் சிங் தெரிவித்தார்.
சோப்ரா குழு அறிக்கையில் கூறியுள்ள பரிந்துரையின்படி, குர்ஜார் இனத்தவருக்குத் தனிப்பட்ட சலுகைகளை வழங்குவது பற்றி பரிசீலிப்பதற்காக, பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் ராமதாஸ் அகர்வால் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதைக் கண்டித்து எந்த விதமான போராட்டம் நடத்துவது என்று ஆலோசிப்பதற்காக குர்ஜார் இனத் தலைவர்கள் இன்று கூடுகின்றனர்.