பதினொராவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் மின்சாரத் துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.6,66,525 கோடி தேவைப்படுகிறது. இது மொத்த திட்டச் செலவுக்குத் தேவைப்படும் தொகையில் 32.35 விழுக்காடாகும் என்று திட்டக் குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவாதம் நாளை பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு 2007 - 2012 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 11 - வது திட்டக் காலத்திற்கு 20,60,193 கோடி ரூபாய் (515 பில்லியன் டாலர்) மொத்தம் தேவைப்படுவதாக திட்டக்குழு கணக்கிட்டுள்ளது. இந்த திட்டக்காலத்தில் உள்கட்டமைப்புத் துறைகளுக்குத் தேவைப்படும் நிதி துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் மேற்கொள்ள வேண்டியத் திட்டங்களுக்காக அதிகபட்சமாக 166.63 பில்லியன் டாலர் (ஒருடாலர் = 40 ரூபாய்) தேவைப்படுவதாகவும், இது மொத்த தொகையில் 32.35 விழுக்காடாகும். அதாவது மின்சாரத் துறையில் புதிய திட்டங்களுக்கு 6,66,525 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.
மின்சாரத் துறைக்கு அடுத்தபடியாக சாலை - பாலம் கட்டும் பணிகளுக்கு 3,14,152 கோடி ரூபாய் (78.54 பில்லியன் டாலர்) அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 15.25 விழுக்காடு நிதி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நிதி ஒதுக்குவது தொடர்பான வரைவு அறிக்கைக்கு திட்டக்குழுவின் முழு அமர்வும்இ மத்திய அமைச்சரவையும் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நாளை நடைபெறும் தேசிய வளர்ச்சிக் குழுவில் விவாதிக்கப்பட்டு பின்னர் ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
மின்சாரம், சாலை - பாலக் கட்டுமானப் பணிக்கு அடுத்தபடியாக இரயில்வேத் துறையில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகளுக்கு 65.45 பில்லியன் டாலர் (ரூ 2,61,808 கோடி ) நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது மொத்த திட்டச் செலவில் 12.71 விழுக்காடாகும். இரயில்வேத் துறை தற்போது ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் உபரி நிதியுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியடைந்து வரும் தொலைத் தொடர்பு துறைக்கு (64.61 பில்லியன் டாலர்) 2,58,439 கோடி ரூபாய் ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் 12.54 விழுக்காடாகும். நீர்பாசனத் திட்டங்களுக்கு ரூ 2,57,344 கோடியும் (64.34 பில்லியன் டாலர்),அதாவது12.49 விழுக்காடும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் பணிகளுக்கு 35.93 பில்லியன் டாலர் ( 1,43,730 கோடி ரூபாய்)இ அதாவது 6.89 விழுக்காடு நிதியும் மேவைப்படுன்றன.
இதேபோன்று துறைமுக மேம்பாட்டிற்கு 22 பில்லியன் டாலரும் (ரூ 87,995 கோடி), விமானத் துறைக்கு 7.74 பில்லியன் டாலர் (ரூ 30,968 கோடி), சமையல் எரிவாயு துறைக்கு 4.21 பில்லியன் (ரூ 16,855 கோடி) அல்லது மொத்த தொகையில் 4.21 விழுக்காடு நிதியை ஒதுக்கவும் திட்டக்குழு திட்டமிட்டு உள்ளது.
திட்டக் குழுவின் இந்த எதிர்காலத் திட்ட மதிப்பீடு உள்நாட்டு, அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும் இது உள்கட்டமைப்புத் துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.