வடஇந்தியா முழுவதும் இன்று காலையிலிருந்து கடுமையான குளிரை உணர முடிந்தது. ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரிக்கும் கீழ் குறைந்ததால் புகழ்பெற்ற தால் ஏரி பனிக்கட்டியாக உறைந்தது.
தலைநகர் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நண்பகல் வரை மூடுபனி கொட்டியது. அதிகபட்சமாக 7 டிகிரியும், குறைந்த பட்சமாக 4.4 டிகிரியும் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அமிர்தசரஸ் நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.6 டிகிரியாகப் பதிவானது. நண்பகல் வரை சராசரி வெப்பநிலை 4 முதல் 5 டிகிரியாக மட்டுமே இருந்ததால் பொதுமக்கள் குளிரில் அவதிப்பட்டனர்.
சாலைகளில் சென்ற பள்ளிக் குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் கனமான கம்பளி உடைகளில் தங்களை மறைத்துக் கொண்டதை பரவலாகப் பார்க்க முடிந்தது.
"நான் 12 கி.மீ. தொலைவிலிருந்து படிக்க வருகிறேன். அதிகாலையில் எழுந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் போக வேண்டும் என்று நினைத்தாலே நடுங்குகிறது. பள்ளிக்குள் நுழைவதற்குள் உறைந்து போகிறேன்" என்றார் நேஹா என்ற மாணவி.
இன்னும் சில பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கே தேனீர் கடைகள் திறந்து விட்டன.
"ஒவ்வொரு நாளும் நான் உண்டாக்கும் நெருப்பில் குளிர் காய்வதற்காகவும், எனது தேனீரைக் குடிப்பதற்காகவும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் வெப்பநிலை பூஜ்யத்தை விடக் குறையும் போதுதான் சமாளிப்பது கடினம்" என்று விபுன்குமார் என்ற தேனீர் கடை உரிமையாளர் கூறினார்.
ஸ்ரீநகரின் வெப்பநிலை நேற்றிரவு முதல் மைனஸ் 5 டிகிரியாக நீடித்தது. இதனால் புகழ்பெற்ற தால் ஏரி வெள்ளைப் பளிங்கு போல காட்சியளித்தது.
உறைந்து கிடக்கும் ஏரியைப் பார்ப்பதற்காக எலும்பைத் தொடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
"சுற்றியடிக்கும் பனிக்காற்றுக்கு நடுவில் உறைந்து கிடக்கும் ஏரியைப் பார்ப்பது ரம்மியமாக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தால் ஏரி உறைந்தே கிடக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்" என்றார் ஆர்.டி.சிங் என்ற சுற்றுலாப் பயணி.
இதற்கு முன்பு கடந்த 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி வெப்பநிலை மைனஸ் 12.8 டிகிரியைத் தொட்டபோது தால் ஏரி முற்றிலும் உறைந்து சாதனை படைத்தது. அதற்குப் பிறகு 1986 ஆம் ஆண்டு ஒருமுறை சிலமணி நேரம் உறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.