பதினேராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் துறைகளை திட்டக் கமிஷன் மாற்றி அமைத்துள்ளது.
இதன் படி 74 விழுக்காடு நிதி ஒதுக்கீடு விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், சமூக நீதி, அடிப்படை கட்டுமானங்களை ஏற்படுத்துதல், விஞ்ஞான வளர்ச்சி, எரிசக்தி மேம்பாடு ஆகிய துறைகளுக்கு ஒதுக்கப்படும்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய வளர்ச்சிக் குழுவின் 54 வது கூட்டம் டில்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தின் திட்ட அறிக்கைக்கு ஒப்பதல் அளிக்கப்படும். இந்த அறிக்கைக்கு ஏற்கனவே திட்ட கமிஷனும், மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த முன்று ஆண்டுகளில் வளர்ச்சி சுமார் ஒன்பது விழுக்காடாக இருக்கின்றது. இதனால் திட்டக் கமிஷன் எல்லா துறைகளிலும் சமச் சீரான வளர்ச்சி ஏற்படும் வகையில் திட்ட ஒதுக்கீடுகளை மாற்றி அமைத்துள்ளது. நாளை நடக்கும் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் திட்ட அறிக்கையில், மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 74 விழுக்காடு நிதி விவசாயம், கல்வி, சமூக நீதி, அடிப்படை கட்டுமானம், விஞ்ஞான வளர்ச்சி, மற்றும் எரி சக்தி ஆகிய துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் செய்திருப்பதால் பிராந்திய அளவில் வளர்ச்சியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கி, எல்லா பிராந்தியங்களிலும் சமச் சீரான வளர்ச்சி ஏற்பட உதவிகரமாக இருக்கும். இது கிராமப்புற மக்களி்ன் வருவாய் உயர்ந்து, வறுமை நீக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துடன் ஒப்பிடுகையில் 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்விக்கு மட்டும் 5 மடங்கு நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் கிடைக்கும் மருத்துவ வசதிக்கு மிகுந்த வேறுபாடு இருக்கின்றது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில் கணிசமான நிதி மருத்துவ துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட காலத்தில் கூடுதலாக 7 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் படித்த வேலை இல்லாத இளைஞர்கள் மத்தியில் உள்ள வேலை இல்லா திண்டாட்டத்தின் அளவை 5 விழுக்காட்டிற்கும் குறைவாக குறைக்க முடியும்.
இந்த திட்ட அறிக்கையில் அரசு நிதியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் எவ்வித ஒளிவு மறைவு இல்லாமல் எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை விளக்கு தனி அத்தியாயமே கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் பூமி வெப்பமடைவதால் சுற்றுச் சூழல் மாற்றம் அடைவதிலும் கவனத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுத்து தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் நிர்ணயிக்கப்படும் திட்ட இலக்குகளை அடைய, தற்போது முதன் முறையாக திட்டக் கமிஷன் 27 இனங்களுக்கு சமூக-பொருளாதார இலக்குகளை நிர்ணயித்து உள்ளது. இதில் 13 வகை மாநில அளவில் கண்காணிக்கப்படும்.
இவை உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம், விவசாய உற்பத்தி விகிதம், புதிய வேலை வாய்ப்பு உருவாக்கம், வறுமை ஒழிப்பு விகிதம், துவக்கப் பள்ளிகளை விட்டு மாணவர்கள் விலகுவதை குறைக்கும் விகிதம், கல்வி அறிவு வளர்ச்சி விகிதம், கல்வியில் ஆண்-பெண் பாகுபாடு, சிசு மரணம், கர்ப்ப காலத்தில் இறப்பு, குழந்தைகள் சத்து பற்றாக்குறை, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மத்தியில் இரத்த சோகை நோய், ஆண்-பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரம் ஆகியவை உட்பட 27 இனங்களின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்ட அறிக்கையில் சந்தை பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியிலும், முதலீட்டிலும் முக்கால் பங்கு தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் சுயமாக இயங்க வேண்டும். இவை சந்தை பொருளாதாரத்தில் மற்ற தனியார் துறை நிறுவனங்கள் இயங்குவது போலவே, சுயேச்சையாக இயங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கடந்த காலங்களில் எல்லா மட்டங்களிலும் வளர்ச்சி அடையவும், வறுமை ஒழிப்பு மற்றம் வளர்ச்சிக்காக கணிசமான தொகை ஒதுக்கி பல திட்டங்களை நடைமுறைபடுத்தி உள்ளன. ஆனால் இவைகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் சரியான முறையில் திட்டமிடவில்லை. பல்வேறு மட்டங்களில் நடந்த ஊழல் என்று கூறப்பட்டுள்ளது.