குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் இறுதி கட்டமாக 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு சிறுசிறு வன்முறை நிகழ்வுகளுக்கு இடையில் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை கடுமையான குளிர் நிலவியதால், வாக்குப் பதிவு மந்தமாகத் தொடங்கியது. 9 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவில் விறுவிறுப்புக் கூடியது. பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றதைக் காணமுடிந்தது.
வடக்கு மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் உள்ள 95 தொகுதிகளிலும் நண்பகல் வரை 25 முதல் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து நடந்த விறுவிறுப்பான வாக்குப் பதிவுக்குப் பிறகு மதியம் 2.30 மணியளவில் 45 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.
பாலிஜேத்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயந்தி ரத்வர், வாக்குப் பதிவு நடக்கும் பகுதிகளில் துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களுடன் வலம்வந்தபோது கைது செய்யப்பட்டார்.
காரில் அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரின் மீது ஆயுதம் வைத்திருந்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் பரபரப்பூட்டும் வேட்பாளர்களாக முதல்வர் நரேந்திர மோடி, அவரை எதிர்த்துப் போட்டியிடும் மத்திய அமைச்சர் தின்ஷா பட்டேல், மாநில அமைச்சர்கள் அனந்தீபன் பட்டேல், அமித் ஷா, அஷோக் பட், மூத்த காங்கிரஸ் தலைவர் நர்ஹாரி அமீன் ஆகியோர் உள்ளனர்.
கடும் நெருக்கடியில் பா.ஜ.க.: கருத்துக் கணிப்பு!
குஜராத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நரேந்தி மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் அரியணை ஏறுவது கடினம் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
வாக்குப் பதிவு நடந்த இடங்களில் ஸடார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, பா.ஜ.க. 25 இடங்களை இழந்து 103 இடங்களைக் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 25 இடங்கள் அதிகம் பெற்று 76 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.
இன்று நடந்த தேர்தலில், பா.ஜ.க. 55 இடங்களையும், காங்கிரஸ் 39 இடங்களையும், மற்றவை 1 இடத்தையும் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.
ஆகமொத்தம் முதல் கட்டம், இறுதிக் கட்டம் ஆகிய இரண்டு வாக்குப் பதிவுகளுக்குப் பிறகும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளைப் பார்க்கையில், இந்தத் தேர்தல் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் கடுமையான சவாலாக இருப்பது தெரிகிறது.
வருகிற 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றே முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலச் சட்டப் பேரவையின் ஆயுட்காலம் டிசம்பர் 26 ஆம் தேதியுடன் முடிகிறது.