வரதட்சணை தடுப்புச் சட்டத்தை அப்பாவி கணவர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் அசோக் பான், டி.கே. ஜெயின் அடங்கிய அமர்வு, "வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படக் கூடாது. வரதட்சணை என்ற பெயரில் கணவர் மற்றும் கணவரின் உறவினர்களால் இளம் பெண்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்ற நோக்கத்தில்தான் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் பகையைத் தீர்த்துக் கொள்ள இதை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது" என்று எச்சரித்தது.
வரதட்சணை கேட்டு தனது கணவரும் அவரது குடும்பத்தாரும் தன்னைக் கொடுமைப் படுத்துவதாக டெல்லியைச் சேர்ந்த நீட்டு என்ற பெண் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தப் மனுவை எதிர்த்து அவரின் கணவர் குடும்பத்தார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு கூறினர்.
அதே நேரத்தில் கணவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்குமாறு கீழ் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலில் இந்த வழக்கு டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தபோது,. நீட்டு கூறிய புகாரை நீதிமன்றம் ஏற்கமறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது.