பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்றும், அவை தவறானவர்களின் கைகளில் சிக்குவது மிகவும் கடினம் என்றும் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 'அமெரிக்கா தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை தவறானவர்கள் கையாள்வது சாத்தியமில்லாதது' என்று கூறியுள்ளார்.
'அணு ஆயுதங்களை கையாள்வது எளிதல்ல. தனி மனிதர்களோ, சிறிய எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்ட குழுக்களோ அணு ஆயுதங்களைக் கடத்த முடியாது. எனவே பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மத அடிப்படை வாதிகளிடம் சிக்குவதற்கான வாய்ப்பும் மிகமிக குறைவானதே என்று கூறிய நாராயணன், ஒருவேளை அப்படி ஏதாவது நடந்தால் அதைச் சமாளிக்கும் திட்டம் இந்தியாவிடம் தயாராக உள்ளது என்றார்.