குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று நடந்துவரும் இறுதிகட்டத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்த பிறகு, "குஜராத் மக்கள் தங்களின் எதிர்காலத்தை எப்போதும் சரியாகத் தீர்மானிப்பார்கள். பா.ஜ.க. விற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தருவார்கள்" என்றார் மோடி.
இத்தேர்தலில் தனது முதல் வாக்கைப் பதிவு செய்த கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பத்தான், "நான் முதல் முறையாக எனது வாக்கைப் பதிவு செய்துள்ளேன். மக்கள் வெளியே வந்து தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
தனது மனைவியுடன் வாக்களிக்க வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி,"பா.ஜ.க.வுக்குள் உள்ள சிக்கல்கள், கட்சியின் வெற்றியைப் பாதிக்காது. இடம் ஒதுக்கும் விவகாரத்தில், பதவியில் உள்ள உறுப்பினர்களுக்கும் புதிய வேட்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சிக்கல் சரிசெய்யப்பட்டு விட்டது" எனறார்.
புதிதாக வாக்களிக்க வந்த பெண்களில் பலர் காங்கிரசுக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்தனர். இதுவரை பா.ஜ.க. ஆட்சி சாதித்ததைப் பார்த்துவிட்டோம், இனி காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.