குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வடக்கு மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் உள்ள 95 தொகுதிகளிலும் நண்பகல் வரை 25 முதல் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
பாலிஜேத்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயந்தி ரத்வர், வாக்குப் பதிவு நடக்கும் பகுதிகளில் துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களுடன் வலம்வந்தபோது கைது செய்யப்பட்டார்.
காரில் அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரின் மீது ஆயுதம் வைத்திருந்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இத்தேர்தலில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மத்திய குஜராத், வடக்கு குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களில் பரவிக் கிடக்கும் 95 தொகுதிகளில் வசிக்கும் 1.87 கோடி வாக்காளர்கள், 599 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறார்கள்.
இன்று காலை கடுமையான குளிர் நிலவியதால், வாக்குப் பதிவு மந்தமாகத் தொடங்கியது. 9 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவில் விறுவிறுப்புக் கூடியது. பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றதைக் காணமுடிந்தது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய துணித்துறை அமைச்சர் சங்கர்சின் வகேலா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களின் வாக்குகளை ஷாபூர், ஷர்கெஜ் தொகுதிகளில் உள்ள உரிய வாக்குச் சாவடிகளில் முதலாவதாகப் பதிவு செய்தனர்.