குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. தேர்தலையொட்டி, அசம்பாவித நிகழ்வுகளைத் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மத்திய குஜராத், வடக்கு குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களில் பரவிக் கிடக்கும் 95 தொகுதிகளில் வசிக்கும் 1.87 கோடி வாக்காளர்கள், 599 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறார்கள்.
காக்டா, சுஜித்ரா, கம்பாட், கரம்சாத், நடியாத், ஆனந்த் போன்ற பதற்றம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 50,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தவிர துணை ராணுவத்தின் 574 படைப் பிரிவுகள் வந்துள்ளன.
தேர்தலுக்காக 20,545 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா வாக்குச் சாவடிகளிலும் வீடியோ கேமரா மூலம் வாக்குப் பதிவைப் படமெடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிப்பதற்காக 4,800 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பணிகளில் மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த 1,23,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இதையடுத்து வருகிற 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றே முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலச் சட்டப் பேரவையின் ஆயுட்காலம் டிசம்பர் 26 ஆம் தேதியுடன் முடிகிறது.
இந்தத் தேர்தலில் பரபரப்பூட்டும் வேட்பாளர்களாக முதல்வர் நரேந்திர மோடி, அவரை எதிர்த்துப் போட்டியிடும் மத்திய அமைச்சர் தின்ஷா பட்டேல், மாநில அமைச்சர்கள் அனந்தீபன் பட்டேல், அமித் ஷா, அஷோக் பட், மூத்த காங்கிரஸ் தலைவர் நர்ஹாரி அமீன் ஆகியோர் உள்ளனர்.
இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் காங்கிசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழங்குடியினரின் வாக்குகளை அதிகம் வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாகப் போட்டியிடுகிறது.