இந்திய- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எல்.எஸ்.ஏ.) பற்றி விவாதிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்.
இந்தியா, அமெரிக்காவின் ராணுவ விமானங்கள், கப்பல்கள் போன்றவை இருநாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், அங்கு எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் இந்த எல்.எஸ்.ஏ. ஒப்பந்தம் வகைசெய்கிறது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை கட்டியாள நினைக்கும் அமெரிக்காவின் கூட்டாளியாக நாம் மாறிவிடுவோம் என்று கூறி இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இதனால், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட எல்.எஸ்.ஏ. ஒப்பந்தம் மத்திய பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழுவிடம் இன்னும் பரிசீலனையில் உள்ளது.
அதேநேரத்தில், எல்.எஸ்.ஏ. ஒப்பந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், இடதுசாரிகள் சொல்வது சரியல்ல என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் அடுத்த ஆண்டு இந்தியா வரும் போது எல்.எஸ்.ஏ. ஒப்பந்தம் பற்றிய எல்லா சந்தேகங்களும் தீர்க்கப்பட்டுவிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.