கடந்த தேர்தலில் பா.ஜ.க. பெருவெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றக் காரணமான மத்திய, வடக்கு குஜராத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
குஜராத் சட்டப் பேரவைக்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11 -ம் தேதி நடந்த நிலையில் 16 -ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஒய்ந்தது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மத்திய, வடக்கு குஜராத்தில் உள்ள 95 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் இந்த இரண்டு மண்டலங்களிலும் உள்ள 95 தொகுதிகளில் 73 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் குஜராத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுக்கு பின்னர் டெல்லி அரசியலில் பல மாற்றங்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 தடவையும், பிரதமர் இருமுறையும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இவர்களைத் தவிர மத்திய அமைச்சர்கள் அர்ஜீன் சிங், கபில்சிபல், சுசில் குமார் ஷிண்டே, ரேணுகா சவுத்ரி, சங்கர் சிங் வகேலா, ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சிமூத்தத் தலைவர்கள் மார்க்கரெட் ஆல்வா, திக்விஜய சிங், மராட்டிய முதல்வர் விலாஷ் ராவ் தேஷ்முக் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சர் நரேந்திர மோடி அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, மல்கோத்ரா, மேனகா காந்தி, வரூண் காந்தி உள்ளிட்ட 58 தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை 23 ஆம் தேதி நடைபெறுகிறது.