தலைநகர் புதுடெல்லியில் இன்று அதிகாலை முதல் கடுமையான மூடுபனி கொட்டி வருவதால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 7 சர்வதேச விமானங்கள் உள்பட 32 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையத்தின் எல்லா ஓடுபாதைகளிலும் அதிகபட்சப் பார்வைத் தூரம் 125 மீட்டராக மட்டுமே இருந்தது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூடுபனியினால், புதுடெல்லிக்கு வரவிருந்த 7 சர்வதேச விமானங்கள், மும்பை, லக்னோ, ஜெய்ப்பூர் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 25 உள்நாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடும் தாமதமாகியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு புதுடெல்லியின் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையே 19.6 டிகிரியாகப் பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.