நமது நாடு சிக்கலான, நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது என்றும், அதனைச் சந்திக்க நமது பாதுகாப்பை நவீனமயப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் இராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறியுள்ளார்!
தலைநகர் டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தலைமைத் தளபதி, இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாதுகாப்பு உற்பத்தியில் தனியார்களின் பங்கேற்பு உதவிகரமானதாக இருக்கும் என்று கூறினார்.
வடக்கில் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுவரும் அதே நேரத்தில் தற்பொழுதுள்ள அணு ஆயுத பின்னணியில் மிகச் சக்திவாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் குறுகிய கால போர்களை சந்திக்கக் கூடிய திறமையையும் நாம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரே நேரத்தில் தீவிரவாதத்தையும், போரையும் எதிர்கொள்ளக் கூடிய சமநிலையின் அவசியத்தை உணர்ந்தால் மட்டுமே அப்படிப்பட்ட அச்சுறுச்சதலை முறியடிப்பது சாத்தியம் என்று கூறினார்.
இந்தச் சூழ்நிலையில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தியில் தனியார் துறையும் இறங்க வேண்டும் என்று தலைமைத் தளபதி கபூர் கேட்டுக் கொண்டார்.