உத்தரபிரதேசத்தில் நிலவிவரும் கடுமையான குளிருக்கு ஒரே இரவில் 11 பேர் பலியாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து குளிருக்கு பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இரவில் பலியான 11 பேரும் ஜான்பூர், கான்பூர், பிஜ்னோர், ஆக்ரா, ஹமிர்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உத்தரபிரதேசத்தின் மலைப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு உள்ளது. ஒருநாளின் பெரும்பாலான நேரங்களில் முக்கியச் சாலைகளில் மூடுபனி கொட்டுவதால் குறைந்தபட்சப் பார்வைத் தூரம் 300 மீட்டராக மட்டுமே உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் லக்னோ, கோரக்பூர் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரியாகப் பதிவானது. கோவில் நகரமான அலகாபாத்தில் 13 டிகிரி வெப்பம் பதிவானது.
பனிப்பொழிவின் காரணமாக கங்கா கோமதி விரைவு ரயில், பிரயாக்ராஜ் விரைவு ரயில் உள்பட சில ரயில்கள் தாமதமாக ஓடுகின்றன. மாநிலத்தின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு குளிர்காலத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக வடமாநிலங்களை பாதித்துள்ளது. மலைப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் நுழைவு வாயிலான ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜவஹர் சுரங்கப் பாதையின் அருகில் 18 செ.மீ. உயரத்திற்கு பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தன.
இதையடுத்து 300 கி.மீ நீளமுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையின் இரண்டு எல்லைகளிலும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.