குஜராத், இமாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற பிறகு மத்திய அரசைக் கைப்பற்றுவதுதான் தங்களின் அடுத்தகட்ட இலக்கு என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப் பதிவை முன்னிட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், இன்று அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, காங்கிரசைக் கடுமையாகத் தாக்கிப் பேட்டியளித்தார்.
குஜராத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் போட்டியிடுவது பற்றிக் கூறுகையில், "காங்கிரசின் தேர்தல் பிரச்சாரத்தைப் பார்க்கும் போது, மணப் பெண் இல்லாத கல்யாணத்தைப் பார்ப்பது போல இருக்கிறது. எங்களுக்கு மணப் பெண்ணாக நரேந்திர மோடி உள்ளார்" என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது ஒருபோதும் ஒழுங்கைக் கடைபிடிப்பதில்லை என்று குற்றம்சாற்றிய ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எப்போது பேசினாலும் சோனியா காந்தியை மரியாதையுடன் அழைத்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.
வாக்குவங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ் கட்சி, உத்தமமான பா.ஜ.க. ஆட்சியாளர்களைப் பார்த்து "மரண வியாபாரிகள்" என்கிறது என்றும் அவர் கூறினார்.
ராமர் பால விவகாரம் பற்றிக் கூறுகையில், "மகாத்மா காந்தி காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ரகுபதி ராகவ ராஜா ராம் என்று கூறுவார். அவர் மரணமடையும் போதுகூட கடைசி வார்த்தையாக ஹே ராம் என்றார். காந்தியை ஏற்றுக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, காந்தி செய்ததைச் செய்ய மறுக்கிறது" என்றார் ராஜ்நாத் சிங்.