சுதந்திரமான பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதற்காக இந்தியா அளித்து வரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நடந்த அயலுறவு அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அண்மையில் நடந்த மத்திய கிழக்கு அமைதி மாநாட்டில் பங்கேற்றபோது, பாலஸ்தீனம் குறித்த தனது கருத்தை இந்தியா வலியுறுத்தியது என்று குறிப்பிட்டார்.
வருகிற 17 ஆம் தேதி பாரீசில் நடக்க உள்ள பாலஸ்தீன நன்கொடையாளர் மாநாட்டில் அயலுறவு இணையமைச்சர் அகமது பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காசாவில் இருதயநோய் மருத்துவமனை அமைப்பது, அபுடிஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை உருவாக்குவது, அல்குட்ஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் பாலஸ்தீனத்திற்கு இந்தியா உதவி வருகிறது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.