தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளில் சிக்குபவர்கள் உடனடியாக அவசர மருத்துவ உதவிகளைப் பெறுவதற்கு ஏற்றவாறு, ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையங்களை அமைப்பதற்காக ரூ.732.75 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி, முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளான தங்கநாற்கரச் சாலைகள், வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு 6 வழிப் பாதைகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒன்று என ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
மற்ற தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை மையங்கள், தேர்வு செய்யப்பட்டுள்ள 140 மாநில அரசு மருத்துமனைகளின் உதவியுடன் மேம்படுத்தப்படும்.
இதில் 20 மருத்துவமனைகள் முதல் தகுதி மையங்களையும், 40 மருத்துவமனைகள் இரண்டாம் தகுதி மையங்களையும், 80 மருத்துவமனைகள் மூன்றாம் தகுதி மையங்களையும் கவனித்து தேவையான வசதிகளை வழங்கும்.
புதுடெல்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி இத்தகவலைத் தெரிவித்தார்.