ரயில்வே கிளினிக்குகள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணியாற்றும் குரூப் சி, டி பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மருத்துவமனை பராமரிப்பு உதவி, நோயாளர் பராமரிப்பு உதவி ஆகியவற்றை வழங்கும் புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி 10 -க்கும் குறைவான படுக்கைகள் உடைய சிறப்பு மருத்துவமனைகள், 30 -க்கும் குறைவான படுக்கைகள் கொண்ட ரயில்வே பொது மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இச்சலுகை பொருந்தும்.
மருத்துவமனை பராமரிப்புப் படியாக மாதம்தோறும் குரூப் சி ஊழியர்களுக்கு ரூ.700 -ம், குரூப் டி ஊழியர்களுக்கு ரூ.695-ம் வழங்கப்படும். இதேபோல நோயாளர் பராமரிப்புப் படியாக இரு பிரிவினருக்கும் ரூ.690 வழங்கப்படும்.
கூடுதலாக, இத்திட்டம் அமலுக்கு வந்தவுடன் இருபிரிவு ஊழியர்களுக்கும் அவசரகாலப் படி, இரவுப் பணிப் படி ஆகியவையும் வழங்கப்படும்.
இந்தப் புதிய திட்டம் அமலுக்கு வருவதற்கான உத்தரவை மத்திய ரயில்வே அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.