சத்தீஷ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பிஸ்ரம்பூர் காவல்நிலையத்தின் மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று நள்ளிரவில் 4 வாகனங்களில் வந்த 50 க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள், துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொண்டே கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர் என்று காவல்துறை தலைவர் ராஜேந்திர குமார் விஜி தெரிவித்தார்.
இத்தாக்குதலில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், தலைமைக் காவலர்கள் இருவர் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
காவலர்கள் கொல்லப்பட்டதை உறுதி செய்துகொண்ட பிறகு, கண்ணிவெடிகளின் உதவியுடன் காவல் நிலையத்தை நக்சலைட்டுகள் தகர்த்துள்ளனர்.
மொத்தம் 15 காவலர்கள் பணியாற்றும் இந்தக் காவல் நிலையத்தில், நக்சலைட்டுகள் கடத்திச் சென்று விடுவார்கள் என்ற காரணத்தால் துப்பாக்கிகள் கூட வைக்கப்படவில்லை.