இந்தியாவிலேயே முதன்முதலாக ரூ.1200 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சுற்றுலா வளாகம் திருப்பதியில் அமைக்கப்பட உள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் வருகை தரும் பல லட்சம் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி திருமலை தேவஸ்தானம் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக திருப்பதியில் ஒருங்கிணைந்த சுற்றுலா வளாகம் அமைக்க திருப்பதி நகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
இந்த சுற்றுலா வளாகத்தில் நட்சத்திர உணவு விடுதி, மருத்துவமனை, மாநாட்டுக் கூடம், விளையாட்டுத் திடல், ஹெலிபேடு உள்ளிட்ட எல்லா வசதிகளும் அமைக்கப்படும்.
இந்த திட்டப் பணியை அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் முடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பணியை முடித்து 33 ஆண்டுகாலம் அவற்றில் வருவாய் ஈட்டிக் கொள்ள தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுடையோர் வரும் 29-க்குள் அணுகலாம் என திருப்பதி நகர வளர்ச்சிக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.