அஸ்ஸாம் மாநிலம் கோலாகட் என்ற இடத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்ததில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் என்ற இடத்திலிருந்து நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புதுடெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. கோலாகட் என்ற இடத்தில் ரயில் வந்தபோது தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒரு ரயில் பெட்டி பலத்த சேதமடைந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கோலாகட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சேதமடைந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் மூன்றடுக்கு ஏசி பெட்டிக்கு மாற்றப்பட்டு காலை 6 மணியளவில் அந்த ரயில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது. சம்பவ இடத்திற்கு ரயில்வே உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.
திப்ரூகர்-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரசுக்கு ஏற்கனவே இரண்டு முறை குறி வைக்கப்பட்டது. எனினும் அந்த ரயில் தாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.