ரஷ்யாவுடன் இணைந்து நமது நாடு தயாரித்துள்ள பிரமோஸ் அதிவேக ஏவுகணையை விமானத்திலிருந்து ஏவுவதற்காக உருவாக்கப்படும் தொழில்நுட்பம் 2009 ஆம் ஆண்டில் முடிவுறும் என்று பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.
கொச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சுகோய்-30 விமானத்தில் இருந்து ஏவும் வகையில் பிரமோஸ் ஏவுகணையின் வடிவத்தை சிறிதாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் 2009 ஆம் ஆண்டு முடிந்து விடும்" என்றார்.
மேலும், "நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை ஏவும் தொழில் நுட்பப் பணிகள் முடிந்து விட்டன. இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் கடற்படையுடன் சேர்ந்து தகுந்த ஏவுதளத்தை தேர்வுசெய்து வருகிறது" என்றும் சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.