கடலுக்கடியில் ஆளில்லாமல் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.
கொச்சியில் நடந்த சர்வதேசப் பெருங்கடல் சார்ந்த மின்னணுவியல் கருத்தரங்கை தொடங்கிவைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நமது கடற்படையில் கடலுக்கடியில் ஆளில்லாமல் இயங்கும் வாகனங்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது போன்ற வாகனங்களை உருவாக்குவதற்காக கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்பட எல்லா கடற்படை கப்பல்களுக்கும் கடலுக்குள் பெயிண்ட் அடிப்பதற்கு தேவையான புதிய தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு வருகிறது.
நீர்மூழ்கிக் கப்பல்களின் தகவல் தொழில்நுட்பத் திறனை அதிகரிக்கும் வகையில் புதிய பல்லடுக்கு சோனார் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மறுறும் தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயன்படுத்துவதற்கான குறைந்த அலைவரிசை சோனார் கருவிகளை உருவாக்கும் முயற்சியில், தேசிய இயற்பியல் மற்றும் பெருங்கடல் சார்ந்த ஆய்வகம் ஈடுபட்டுள்ளது என்று சிவதாணு பிள்ளை கூறினார்.