குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பது நடந்து முடிந்த முதல்கட்ட வாக்குப் பதிவிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என்றார்.
"டிசம்பர் 16 ஆம் தேதி நடக்கவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போதும் பா.ஜ.க.வைப் பொதுமக்கள் புறக்கணிப்பார்கள்.
இதையடுத்து, 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, குஜராத் மக்கள் பிரிவினையற்ற சமூக பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரக்கூடிய உண்மையிலேயே மதசார்பற்ற அரசைப் பெறுவார்கள்." என்றார் அவர்.
மேலும், "குஜராத் தேர்தலில் அதிகம் அக்கறை காட்டாத முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஹிமாச்சலப் பிரதேசத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதிலிருந்தே, மோடி வெற்றிபெறுவார் என்று வாஜ்பாய் கூட நம்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றும் ஜெயந்தி நடராஜன் கூறினார்.